புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் சம்பல் நகரில் நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட ஞாயிற்றுக்கிழமையன்று காங்கிரஸ் கட்சியினர் சென்றிருந்தனர். அப்போது அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் அப்பகுதி சில மணி நேரம் பதற்றமாகக் காணப்பட்டது.
சம்பலில் ஜமா பள்ளிவாசலில் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்யச் சென்ற தொல்லியல் துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், வன்முறை பாதித்த சம்பல் பகுதியை பார்வையிட காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் தலைவர் அஜய் ராய் தலைமையில், சம்பல் நகரில் பாதிக்கப்பட்ட பகுதியை நோக்கிச் சென்றனர். அப்போது காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து அவர்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது.
வெளியூர் ஆள்கள் ஊருக்குள் நுழைய டிசம்பர் 10ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியின் சம்பல் பகுதியைப் பார்வையிடும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என காவல்துறை முன்னதாக காங்கிரஸ் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சம்பல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, வன்முறைச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள்மீது பொய்யாக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சட்ட உதவி வழங்கப்படும் என்று சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மொராதாபாத் மேயருமான எஸ்.டி.ஹாசன் தெரிவித்துள்ளார்.

