பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்

2 mins read
a5eda572-081c-4e76-a06d-e81b58388687
சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் இருக்கும் புகைப்படம். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்,ஆகஸ்ட் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பாஜகவில் இணைய உள்ளதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்காக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக ஹிமந்த பிஸ்வா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார்.

“ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தேசத்தின் ஆதிவாசி தலைவர்களில் ஒருவருமான சம்பாய் சோரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிகாரபூர்வமாக பாஜகவில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அவர் இணைய உள்ளார். இந்த நிகழ்ச்சி ராஞ்சியில் நடைபெற உள்ளது,” என அந்தப் பதிவில் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தச் சம்பவம் ஜார்கண்ட் அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சம்பாய் அதிருப்தி

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் பதவி விலகினார். இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் சம்பாய் சோரன் அதிருப்தியில் இருந்தார். இதனால், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் சம்பாய் சோரன் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்