மும்பை: முதல்வர் யார் என்பதை அமித்ஷாவும் நரேந்திர மோடியும் தான் முடிவெடுப்பார்கள். ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் அவர்களுடைய கட்சிக்காகத் தனித்து முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் கட்சிகளுமே அமித்ஷா மற்றும் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. அவை பாஜகவின் துணை நிறுவனங்களாகத்தான் செயல்பட்டு வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் (சிவசேனை, உத்தவ் அணி) சாடியுள்ளார்.
பாஜகவுக்குத்தான் தற்போது பெரும்பான்மை உள்ளது. தனித்து ஆட்சி அமைக்க ஷிண்டேயின் சிவசேனா கட்சியையும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் கூட பாஜகவினர் உடைப்பார்கள். என்னைப் பொறுத்தவரை தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் அடுத்த முதல்வர் ஆவார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத் முன்னதாக, இந்தத் தேர்தல் முடிவுகள் மக்கள் அளித்த தீர்ப்பு அல்ல. இதில் ஏதோ சதி வேலை இருக்கிறது. இந்த முடிவுகள் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று கூறியிருந்தார். மேலும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மாநில அரசியலில் இருந்து விலகியவர்களிடம் சட்டத்தின் அச்சத்தைப் போக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீதான முடிவு தேர்தலில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ.) தோல்விக்கு வழிவகுத்தது என்று சஞ்சய் ராவத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.