புதுடெல்லி: சிங்கப்பூரின் சேட்ஸ் (SATS) நிறுவனம் இந்தியாவில் பல்செயல்வகை சரக்கு நடுவம் (multimodal cargo hub) ஒன்றைக் கட்டவிருக்கிறது.
சாட்ஸ்-ஏர் இந்தியா நிறுவனங்களின் கூட்டுநிறுவனமான ஏஐசேட்ஸ் (AISATS) அந்த நடுவத்தை வடிவமைத்து, கட்டி, ஏற்று நடத்தவிருக்கிறது.
யமுனா அனைத்துலக விமான நிலைய பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தச் சரக்கு நடுவத் திட்டத்திற்கு ஏஐசேட்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளது.
அந்த ஐந்தடுக்குப் பல்செயல்வகை சரக்கு நடுவம், உத்தரப் பிரதேச மாநிலம், ஜேவரில் அமையவிருக்கும் நொய்டா அனைத்துலக விமான நிலையத்தில் கட்டப்படவிருக்கிறது.
இதுபோன்ற பல்செயல்வகை சரக்கு நடுவம் இந்தியாவில் அமைவது இதுவே முதன்முறை.
கிட்டத்தட்ட 87 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் அந்நடுவம், ஒருங்கிணைந்த சரக்கு முனையம், ஒருங்கிணைந்த சேமிப்புக் கிடங்கு, தளவாட மண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
வரும் வாரங்களில் திட்டத்திற்கான உடன்பாடு இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் புதுடெல்லியை ஒட்டிய பகுதியான, பெரிய வர்த்தக நகரமாக வளர்ந்து வரும் நொய்டாவில் 2024ஆம் ஆண்டு இறுதியில் அந்த அனைத்துலக விமான நிலையத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

