புதுடெல்லி: கடந்த ஆண்டு இந்தியர்களை ஆக அதிக எண்ணிக்கையில் நாடு கடத்திய நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் மியன்மாரும் உள்ளன. இத்தகவலை இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.
சட்ட விரோத குடியேற்றம், இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தங்கள் நாட்டில் தலைமறைவாக இருப்பவர்கள், உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்களை பல்வேறு உலக நாடுகள் இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு நாடு கடத்துகின்றன.
அந்த வகையில் கடந்த ஓராண்டில் மட்டும் 81 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 24,400 க்கும் அதிகமான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஆக அதிகமாக சவூதி அரேபியாவில் இருந்து 11,000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து 3,800 பேரும் மியன்மாரில் இருந்து 1,591 பேரும் நாடு கடத்தப்பட்டனர்.
மலேசியாவில் இருந்து 1,485 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 1,469 இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இப்பட்டியலில் தாய்லாந்து எட்டாம் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இருந்து 481 பேர், கம்போடியாவில் இருந்து 305 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பொதுவாக அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்குவது, அனுமதியின்றி வேலை பார்ப்பது முதலாளிகளை ஏமாற்றி விட்டு தப்பிச் செல்வது போன்ற காரணங்களுக்காக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வெளியேற்றப்படுகின்றனர்.
எனினும், வளைகுடா நாடுகளில் கட்டுமானத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஏராளமான இந்தியர்கள் தொடர்ந்து அங்கு செல்கின்றனர்.

