மும்பை: பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா கைக்கோர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இரு நாட்டுக்கும் இடையே உள்ள பரஸ்பர ஆர்வத்தையும் உணர்வையும் மனத்தில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளில் எது தாக்கப்பட்டாலும் மற்ற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் செப்டம்பர் 17ஆம் தேதியன்று கையெழுத்திட்டன.
உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள அந்த ஒப்பந்தத்தைக் கருத்தில் கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 19) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “இந்தியாவும் சவுதி அரேபியாவும் ஒரு பரந்த அளவிலான உத்திபூர்வ பங்காளித்துவத்தைக் கொண்டுள்ளன. அந்த உறவு கடந்த சில ஆண்டுகளில் வலுவடைந்துள்ளது,” என இந்தியா நம்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
மேலும், இருதரப்பு நலன் கருதி சவூதி செயல்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.
இதற்கிடையே, பாகிஸ்தானுக்கும் சவூதிக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அறிந்திருப்பதாகவும் அதன் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 18) தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.