புதுடெல்லி: அறிவிப்பின்றி சவூதி அரேபிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அதெல் அல்-ஜுபெர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சவூதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அவசரமாக புதுடெல்லி சென்றுள்ளார்.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பதிலடியாக பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்கள் நடத்தியது.
இந்தத் தாக்குதல்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் எல்லையிலுள்ள இந்தியப் பகுதிகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அதெல் அல்-ஜுபெர் அவசரமாக வியாழன் (மே 8) டில்லி வந்தார். முன்னறிவிப்பு ஏதுமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில் அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளப் பதிவில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை சவூதி அமைச்சருடன் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதன் (மே 7) போர்ப் பதற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி டெல்லி சென்றது குறிப்பிடத்தக்கது.