புதுடெல்லி: இந்தியா முழுவதும் நிலுவையில் இருக்கும் 800,000க்கும் அதிகமான, மரண தண்டனைக்கு எதிரான கருணை மனுக்களை விரைவில் அகற்ற முயற்சி எடுக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கீழ்நீதிமன்றங்களில் மரண தண்டனைக்கு எதிரான கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதன் தொடர்பில் ஜே பி பர்டிவாலா, பங்கஜ் மிட்டல் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு, “எங்களிடம் வந்த புள்ளிவிவரங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. நாடு முழுவதும் நிலுவையில் உள்ள கருணை மனுக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. இதுவரை, மரண தண்டனைக்கு எதிரான 882,578 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன,” என்று கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 16) எடுத்துரைத்தது.
கடந்த ஆறு மாதங்களில் 338,685 கருணை மனுக்கள் அகற்றப்பட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதேவேளை, 800,000க்கும் மேற்பட்ட கருணை மனுக்கள் அகற்றப்படாமல் இருப்பதை நீதிபதிகள் குழு சுட்டிக்காட்டியது.
மரண தண்டனைக்கு எதிரான கருணை மனுக்களின் நிலவரம் குறித்து பல்வேறு உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களிடமிருந்து தகவல் சேகரித்த பிறகு உச்ச நீதிமன்றம் இந்த விவரங்களைத் தெரிவித்தது. நிலுவையில் உள்ள மரண தண்டனைக்கு எதிரான கருணை மனுக்களை அகற்ற வகைசெய்ய தங்களின் நடைமுறைகளை மேம்படுத்தித் தங்களிடம் வரும் மாவட்ட நீதித்துறையினருக்கு வழிகாட்டுமாறு உச்ச நீதிமன்றம், 10 பக்கங்கள் கொண்ட ஆணையின் மூலம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் தங்களிடம் போதுமான தகவல்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கான மரண தண்டனைக் கருணை மனுக்கள் தொடர்பான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு நினைவூட்டியது.
உயர் நீதிமன்றங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி மகாராஷ்டிர மாநிலத்தில்தான் ஆக அதிகமான மரண தண்டனைக்கு எதிரான கருணை மனுக்கள் நிலுவையில் இருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்தது. அந்த மாநிலத்தில் 340,000க்கும் அதிகமான மரண தண்டனைக்கு எதிரான கருணை மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன. அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 86,000 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன.
அதேவேளை, சிக்கிமில்தான் ஆகக் குறைவாக 61 கருணை மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன.