சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: மூவருக்கு வலைவீச்சு

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: மூவருக்கு வலைவீச்சு

1 mins read
14682c73-5d5e-4725-9976-ae85489ffb2a
வேலை இருப்பதாக சிங்கப்பூருக்குச் சென்ற ஆடவர், சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

ஆலங்குடி: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6.85 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை காவல்துறை தேடி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே செரியலூர் ஜெமீன் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மாறனின் மகன் விஜய், 30.

இளவரசன் என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக விஜய்யிடம் கூறியுள்ளார்.

அதனை நம்பிய விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் பல தவணைகளில் ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்தை இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட இளவரசன், போலி வேலை வாய்ப்பு ஆவணத்தை விஜய்யிடம் கொடுத்துள்ளார். அதனை நம்பி சிங்கப்பூர் சென்ற விஜய், தம்மிடம் குறிப்பிடப்பட்ட நிறுவனத்தில் வேலை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வேறு ஒரு நிறுவனத்தில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலையில் சேர்க்கப்பட்டார்.

இருப்பினும், சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் விசாரணையில் போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் விஜய்யின் வேலை பறிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தமது குடும்பம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜய்யின் தந்தை கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பெரியசாமி, 55, இளவரசன், 32, அவரது சகோதரர் இயலரசன், 29, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூவரையும் தேடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
வேலைமோசடிமனிதவள அமைச்சு