ஜெய்ப்பூர்: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் நிலையில், சந்தேகப்படாத ரசிகர்களைக் குறிவைத்து இணையக் குற்றவாளிகள் செயல்பட்டு வருவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
உண்மையான நுழைவுச்சீட்டு விற்பனை இணையத்தளம் போன்று போலியான இணையத்தளங்களை உருவாக்கி, தள்ளுபடி விலையில் நுழைவுச்சீட்டுகள், பரிசுப்பொருள்கள் போன்ற அதிரடிச் சலுகைகளை வழங்குவதாகக் குற்றவாளிகள் வலைவீசக்கூடும் என்று ராஜஸ்தான் மாநிலக் காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவுத் தலைமை இயக்குநர் ஹேமந்த் பிரியதர்ஷி அறிவுறுத்தியுள்ளார்.
தங்களது தனிப்பட்ட, நிதிசார்ந்த விவரங்களை அவர்கள் ஏமாற்றிப் பெறக்கூடும் என்றும் போலியான அல்லது செல்லாத நுழைவுச்சீட்டு போன்ற வழிகளில் பண இழப்பு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அதுதொடர்பான பல புகார்களில், ஐபிஎல் போட்டிகளுக்குத் தள்ளுபடி விலையில் நுழைவுச்சீட்டு வழங்குவதாக அல்லது பரிசுகள் வழங்குவதாக மின்னஞ்சல் வழியாகவும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் வழியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மோசடி இணைப்புகள் வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளன,” என்றும் அவர் சொன்னார்.
சில நேரங்களில் நேரடி அழைப்பு உதவி எண்களையும் அவர்கள் இணையம்வழி பரப்பக்கூடும் என்றும் அவற்றைத் தொடர்புகொள்ளும் ரசிகர்களின் வங்கிக் கணக்கு அல்லது யுபிஐ விவரங்களைப் பெற்று, அவர்களது கணக்குகளிலிருந்து பணத்தைப் பறிக்கக்கூடும் என்றும் திரு ஹேமந்த் எச்சரித்துள்ளார்.