அம்ரோஹா: உத்தரப் பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹில்டன் பொதுப் பள்ளியில் மதியம் சாப்பிடுவதற்காக மாணவர் ஒருவர் இறைச்சி பிரியாணி கொண்டு வந்தார். இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றியது.
மதிய உணவுக்காக ஏழு வயது மகனுக்கு தாயார் இறைச்சி பிரியாணி கொடுத்திருந்தார்.
இதையடுத்து, அந்த மாணவன் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடனடியாக பள்ளிக்கு வந்த மாணவனின் தாய்க்கும் பள்ளி முதல்வருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டதால் உணவுப் பழக்கவழக்கங்களை வைத்து பள்ளியில் பாகுபாடு காட்டப்படுவதாக விமர்சிக்கப்படுகின்றன.
இந்த விவகாரம் பெரிதாகி மாநில பள்ளிக்கல்வித் துறையின் கவனத்துக்குச் சென்றது. இதன் பிறகு விசாரணை நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் பள்ளி முதல்வர் மீது தவறில்லை என்று நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இருப்பினும் விசாரணை முடியும் வரை முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட மாணவனை வேறு பள்ளிக்கு மாற்ற தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று அம்ரோஹா மாவட்ட கல்வி ஆய்வாளர் விஷ்ணு பிரதாப் தெரிவித்துள்ளார்.