பள்ளியில் சண்டை; 14 வயது மாணவன் குத்திக் கொலை

1 mins read
7017b04f-e6d7-4fe8-a59f-4d96e016b297
மாணவன் கொலை தொடர்பில் 19 முதல் 31 வயதிற்குட்பட்ட எழுவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. - மாதிரிப்படம்

புதுடெல்லி: சக மாணவனுடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து, 14 வயது மாணவன் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 3) இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நிகழ்ந்தது.

ஏழாம் வகுப்பில் படித்து வந்த இஷு குப்தா என்ற அம்மாணவனுக்கும் கிருஷ்ணா என்ற இன்னொரு மாணவனுக்கும் பள்ளி நேரத்திற்குப்பின் நடந்த சிறப்பு வகுப்பின்போது கடுமையான வாக்குவாதம் மூண்டது.

வகுப்பு முடிந்தபின் பள்ளிக்கு வெளியே கிருஷ்ணாவும் வேறு சில மாணவர்களும் சேர்ந்து இஷுவைத் தாக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.

அப்போது, அவர்களில் ஒரு மாணவன், இஷுவின் தொடையில் கத்தியால் குத்தினான். தகவலறிந்த பள்ளி ஊழியர்கள் இஷுவிற்கு முதலுதவி அளித்து, அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இஷு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் 19 முதல் 31 வயதிற்குட்பட்ட எழுவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

“இவ்விவகாரத்தில் அவர்களின் பங்கு, நோக்கம் முதலியவை குறித்து விசாரித்து வருகிறோம். இறந்த மாணவனின் உடல் உடற்கூறாய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது,” என்று காவல்துறையின் அறிக்கை தெரிவித்தது.

கடந்த மாதம் டெல்லியை ஒட்டிய ஃபரிதாபாத்தில் பதினொன்றாம் வகுப்பில் படித்து வந்த மாணவர் ஒருவர், தன் சகோதரியுடன் சந்தைக்குச் சென்றிருந்தபோது முன்பகை காரணமாக கத்தியாலும் கழிகளாலும் தாக்கிக் கொல்லப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்