பள்ளி மாணவி கொடூரக் கொலை: பொதுமக்கள் தொடர் போராட்டம்

பள்ளி மாணவி கொடூரக் கொலை: பொதுமக்கள் தொடர் போராட்டம்

2 mins read
d85a716c-6fa1-4efe-9650-c3f1574f09fe
மாணவியின் சடலம் மற்றும் அவரது ஆடைகள் களைந்திருந்ததைக் கண்ட பொதுமக்கள் குளத்தூரில் இரு நாள்களாக சாலை மறியலில் ஈடுபட்டனர். - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் காட்டுக்குள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகள், அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மாலையில் தேர்வுக்காக நீண்டநேரம் படித்துக்கொண்டிருந்தார். மாலை 6.30 மணியளவில், இயற்கை உபாதையைக் கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு மாணவி சென்றதாகக் கூறப்பட்டது.

வெளியே சென்ற மாணவி நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். ஆனால், அங்கிருந்த காவல்துறையினர் விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அவரிடம் தெரிவித்தனராம்.

அதன்படி, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோதும் உடனடியாக புகார் பதிவு செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து மீண்டும் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர், புதன்கிழமை (மார்ச் 11) மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் தேடினர். அப்போது காட்டுக்குள் ஓரிடத்தில் உடலில் வெட்டுக் காயங்களுடன் மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்ற தகவல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என்று காவல்துறை கூறியுள்ளது.

மாணவி சடலமாக மீட்கப்பட்டது, அவரது ஆடைகள் களைந்திருந்ததைக் கண்ட பொதுமக்கள் குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள், வியாழக்கிழமை காலை வேடநத்தம் பகுதியில் சாலையோரம் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கருவிகளைக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்