சம்பல் வன்முறையில் ஐவர் பலி

2 mins read
fb3df935-6ccc-412c-b139-446c43a6bdb1
கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டோரை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். - படம்: இந்திய ஊடகம்

சம்பல்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் திடீர் என்று மூண்ட கலவரத்தில் ஐவர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர்.

அதனால், சம்பல் வட்டாரத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

மாநிலத்தின் சம்பல் நகரில் முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா பள்ளிவாசலை ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றனர்.

அப்போது உள்ளூர் மக்களுக்கும் அதிகாரி​களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. அது கலவரமாக மாறியதில் ஐவர் மரணமடைந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சம்பல் பகுதியில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.

12ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை (நவம்பர் 25) விடுமுறை விடப்பட்டது. பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கற்கள், சோடா புட்டிகள் அல்லது வெடிக்கக்கூடிய பொருள்களை வாங்கவும் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பல் பகுதிக்குள் டிசம்பர் 1ஆம் தேதிவரை வெளியாட்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன் அனுமதியின்றி வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பல் நகரில் ஜமா பள்ளிவாசல் கட்டப்​படு​வதற்கு முன்பாக அந்த இடத்​தில் இந்துக் கோயில் இருந்​த​தாகச் சொல்லப்பட்டதால் அங்கு ஆய்வு நடத்தக் கோரி நீதி​மன்​றத்​தில் வழக்குத் தொடரப்​பட்​டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

அதைத் ​தொடர்ந்து, தொல்​லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்​கொள்​வதற்காக சம்பல் பகுதி​யில் உள்ள ஜமா பள்ளிவாசலுக்கு ஞாயிறன்று காலை சென்றனர்.

அப்போது, அங்கு கூடி​யிருந்த மக்கள் ஆய்வு நடத்த கடும் எதிர்ப்புத் தெரி​வித்​தனர்.

நீதி​மன்ற உத்தர​வு என்பதால் ஆய்வுப் பணியைத் தொடங்குவதில் அதிகாரிகள் உறுதியாக இருந்​தனர்.

அதனால் அங்கிருந்தோருக்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்​தது.

அந்தச் சம்பவத்தில், நயீம், பிலால், நவ்மன் என்னும் மூவர் மாண்டதாக ஞாயிறு இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை திங்கட்கிழமை ஐந்தாக அதிகரித்தது.

காயமடைந்த 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அந்த வட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆஞ்சநேய குமார் சிங் என்னும் காவல்துறை அதிகாரி கூறினார்.

கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக பெண்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய காவல்துறை, கலவரம் வெடித்தது குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் கலவரத்தில் தொடர்புடையோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறியது.

குறிப்புச் சொற்கள்