மும்பை: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஏவுகணைத் தாக்குதலால் பள்ளிகள் மூடப்பட்டன.
வெள்ளிக்கிழமை (செப் 6) நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் காயம் அடைந்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி மக்களுக்கும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையே ஓராண்டுக்கு முன்பு மோதல் வெடித்தது.
அப்போதிலிருந்து கலவரங்களும் வன்முறைகளும் நடைபெற்று வருகின்றன.
முன்பு இணைந்து வாழ்ந்த இரு பிரிவினரும் இன அடிப்படையில் பிளவுபட்டுள்ளனர்.
செப்டம்பர் 7ஆம் தேதியிலிருந்து அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்று உள்ளூர் அரசாங்கத்தின் அறிவிப்பு தெரிவித்தது. மாணவர், ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய நாளில் (செப் 6) மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஒரு கிளர்ச்சிக் குழு ஏவுகணைகளைப் பாய்ச்சியது. இந்தத் தாக்குதலுக்கு ‘குக்கி போராளிகள்’ காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் காவல்துறை நம்புகிறது.
இந்த சம்பவத்தில் 78 வயது முதியவர் உயிரிழந்ததாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த மைரன்பாம் கொய்ரெங் சிங்கின் வீட்டை ஏவுகணைத் தாக்கியதில் முதியவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கும்பல் ஒன்று டிரோன்கள் மூலம் வெடிபொருள்களை வீசிய சில நாள்களுக்குப் பிறகு செப்டம்பர் 6ஆம் தேதி தாக்குதல் நடைபெற்றது. கிளர்ச்சிக்காரர்கள் மேற்கொண்ட இந்த டிரோன் தாக்குதலில் 31 வயது பெண் கொல்லப்பட்டார். அறுவர் காயம் அடைந்தனர்.