மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் தொடர்பில் சிற்பக் கலைஞர்மீதும் ஒப்பந்ததாரர் ஒருவர்மீதும் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.
சிந்துதுர்க் மாவட்டம், ராஜ்கோட் மாவட்டத்தில் நிறுவப்பட்ட அச்சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2023ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி திறந்துவைத்தார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) பிற்பகலில் அச்சிலை விழுந்து நொறுங்கியது.
இதனையடுத்து, ஜெய்தீப் ஆப்தே என்ற சிற்பிமீதும் சேத்தன் பாட்டீல் என்ற கட்டுமான ஆலோசகர்மீதும் பொதுப்பணித்துறை காவல்துறையில் புகார் அளித்தது. அதன் அடிப்படையில், காவல்துறை அவ்விருவர்மீதும் வழக்கு பதிந்துள்ளது.
“நிகழ்விடத்தில் இருந்து தடயவியல் துறை மாதிரிகளைச் சேகரித்துள்ளது. சிலை விழுந்து உடைந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் வல்லுநர்களும் ஈடுபடுத்தப்படுவர். இதுவரை ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் ஆராயப்படும். தடயவியல் ஆய்வக அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று சிந்துதுர்க் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சௌரப் குமார் தெரிவித்துள்ளார்.
அச்சிலையை உருவாக்குவதற்காகக் கடற்படைக்கு ரூ.2.4 கோடி தரப்பட்டது என்று பொதுப்பணித்துறை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
கட்டுமானத் தரம் மோசமாக இருந்தது என்றும் துருப்பிடித்த மரையாணிகளும் (Bolts) திருகிகளும் (Nuts) பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு பதியப்பட்டுள்ள இருவர்மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்குப் பத்தாண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அதே இடத்தில் 100 அடி உயரத்தில் புதிய சிவாஜி சிலையை மகாராஷ்டிர அரசு நிறுவும் என்று மாநில அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.

