மும்பை: சோமாலியா கடற்பகுதிகளில் இந்தியர்கள் 22 பேர் இருந்த இரண்டு சரக்குக் கப்பல்களைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏமன் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஏடென் வளைகுடா அருகே எத்திரியா நாட்டின் கொடி ஏந்திய எண்ணெய்ச் சரக்குக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது, அதனை ஆயுதமேந்திய கடற்கொள்ளையர் கும்பல் சிறைப் பிடித்து, கடத்திச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்ட அந்தக் கப்பலில் இந்தியர்கள் 16 பேர் இருந்தனர்.
கடத்தப்பட்ட கப்பலில் மொத்தம் 20 பேர் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் கடல்சார் நிர்வாக இயக்குநரகம் தெரிவித்ததுள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) சோமாலியா நாட்டின் புன்ட்லாந்து கடற்கரைக்கு அருகே கேமரூன் கொடி ஏந்தியிருந்த சரக்குக் கப்பலையும் கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.
அந்தக் கப்பலிலும் இந்தியர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 10 பேர் இருந்தனர்.
துருக்கிய ராணுவப் பயிற்சி மையத்திற்கு ஆயுதங்களையும் தகவல் தொடர்புச் சாதனங்களையும் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் அந்தக் கப்பலை, நுகால் கடற்கரையை நோக்கிக் கடற்கொள்ளையர்கள் கொண்டுசென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்ட அந்தக் கப்பல் மற்றும் அதிலிருந்த பணியாளர்களின் நிலை குறித்துத் துருக்கிய அதிகாரிகள் தகவல் ஏதும் வெளியிடவில்லை.


