புதுடெல்லி: இந்தியாவில் வணிக ரீதியிலான நீர்விமானச் சேவை விரைவில் தொடங்கவிருக்கிறது.
முதற்கட்டமாக லட்சத்தீவிலிருந்து நீர்விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது.
‘ஸ்கைஹாப் ஏவியேஷன்’ என்ற நிறுவனம் இதற்கான அனுமதியை இந்தியப் பொது விமானப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து பெற்றுள்ளது.
முன்னதாக, உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் ‘ஸ்கைஹாப் ஏவியேஷன்’ நிறுவனம், கங்கா தடுப்பணையில் இருந்து விமானத்தை மேலே கிளப்பியும், நீரில் இறக்கியும் வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
நீர்விமானச் சேவை லட்சத்தீவுப் பகுதியில் உள்ள ஐந்து தீவுகளுக்கு இயக்கப்பட உள்ளது. நீர்விமானத்தில் ஒரே நேரத்தில் 19 பேர் பயணம் செய்ய முடியும்.
லட்சத்தீவில் விமான நிலைய கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லை. இதனால் லட்சத்தீவில் உள்ள ஐந்து தீவுகளுக்குச் சென்று வருவது மெதுவாகவும் சிக்கலாகவும் உள்ளது. புதிதாக அறிமுகம் காணும் நீர்விமானச் சேவை பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்விமானச் சேவையால் பயண நேரம் வெகுவாகக் குறையும் என்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
விமான நிலையங்கள் அமைக்க முடியாத மலைப்பாங்கான இடங்கள், யாரும் எளிதில் செல்ல முடியாத தீவுகள், நீர்ப்பகுதிகள் ஆகிய இடங்களுக்கு இந்த நீர்விமானச் சேவை மிகப் பெரிய பங்காற்றும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

