என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு; பிப்ரவரி 26ல் பியூஷ் கோயல் சென்னை வருகை

என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு; பிப்ரவரி 26ல் பியூஷ் கோயல் சென்னை வருகை

2 mins read
a525f503-bea1-4065-8d98-f0a158a1a084
தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல். - படம்: டெக்கன் குரோனிக்கல்

சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்கும் வகையில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வரும் 26ஆம் தேதி சென்னை வருகை தர உள்ளார். அப்போது, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணியை முடித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

குறிப்பாக, ஓராண்டுக்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த நிலையில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கு, பாஜக அதிக தொகுதிகளைக் கேட்டு அதிமுகவுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. 50 முதல் 60 தொகுதிகள் வரை கேட்பதாக வரும் தகவல்கள் அதிமுகவினர் மத்தியில் பாஜக மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கூட்டணி அமைத்து நீண்ட நாள்களாக எந்தக் கட்சிகளும் சேராத நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் சில நாள்கள் முகாமிட்டு கூட்டணி தொடர்பான பணிகளைத் தீவிரப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தன. ஆனால் அதற்குப் பிறகு முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையவில்லை.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூறப்படுகிறது. மேலும் பாஜகவுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்யவும் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் வரும் 26ஆம் தேதி தமிழகப் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், வரும் மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு வருவதற்குள், கூட்டணிக் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்