புதுடெல்லி: மின்னிலக்கத் தங்க முதலீட்டில் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) முதலீட்டாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய சேவையை வழங்கும் பல இணையத் தளங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் ஏதேனும் மோசடி நடந்தால் சட்ட ரீதியில் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் ‘செபி’யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது மின்னிலக்கத் தங்கம், ‘ஈ கோல்ட்’ உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவற்றில் ஏராளமானோர் முதலீடு செய்வதாகக் கூறப்படுகிறது.
எனினும், இத்தகைய வசதிகளுக்குப் பின்னால் சில ஆபத்துகள் இருப்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும் என்பதே ‘செபி’யின் அறிவுறுத்தல்.
மின்னிலக்கத் தங்கச் சேவையை வழங்கும் சில நிறுவனங்கள் ‘செபி’யின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால் அவை ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன.
எனவே, இணையத்தளங்கள் மூலம் செய்யப்படும் முதலீடுகளைக் கொண்டு ஏதேனும் மோசடி நடந்தால் ‘செபி’யால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாது. மேலும், நஷ்ட ஈடும் கிடைக்காது.
‘செபி’யால் ஒழுங்குபடுத்தப்படும் தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதி (கோல்ட் ஈடிஎஃப்), ‘ஈ கோல்ட்’ ரசீது போன்ற அமைப்பு சில நிறுவனங்களால் பின்பற்றப்படுவதில்லை.
மின்னிலக்கத் தங்கத்தை வாங்குவதற்கு உங்களிடம் குறைந்த தொகைகூட போதும். அன்றைய தேதிக்கு தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்ப உங்கள் கணக்கில் தங்கம் வரவு வைக்கப்படும். மேலும், சந்தை விலைக்கு ஏற்ப தங்கத்தை விற்கவும் முடியும்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து பல நிறுவனங்கள் நிறைய விளம்பரங்களை வெளியிடுகின்றன.
இந்நிலையில், தங்களிடம் முறையாக அனுமதி பெற்று ‘டிஜிட்டல்’ தங்கத்தை விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு ‘செபி’ அறிவுறுத்தி உள்ளது.

