தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவு செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

2 mins read
d1a6476e-688a-4747-ab0d-398457d6039e
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அசாமில் 1966ஆம் ஆண்டு முதல் 1971 வரை குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் வழங்கும் 6ஏ சட்டப்பிரிவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதையடுத்து அசாமில் 1966ஆம் ஆண்டிலிருந்து 1971 வரை குடியேறியவர்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைக்கும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி, இத்தகைய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்த இந்து, சீக்கியர், ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும்.

1966ஆம் ஆண்டுக்கும் 1971ஆம் ஆண்டுக்கும் இடையே பங்ளாதேஷிலிருந்து அசாமில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இதை எதிர்த்தும் குடியுரிமைச் சட்டத்தின் 1955 பிரிவு 6ஏயை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்யகாந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்குத் தொடர்பில் தீர்ப்பு அளித்தது.

“அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் தரும் 6ஏ சட்டப்பிரிவு செல்லும்,” என்று அமர்வு தெரிவித்தது.

மொத்தம் ஐந்து நீதிபதிகளில் ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தார். மற்ற நான்கு நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர் என்று தினமலர் தகவல் தெரிவிக்கிறது.

“ஒருவர் தங்கள் அண்டை வீட்டில் யார் இருக்கவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க முடியாது. ஏனெனில் அது அரசியலமைப்பின் கொள்கைக்கு எதிரானது. வாழு, வாழ விடு என்பதே கொள்கையாகும். பிரிவு 6ஏ என்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று கருதமுடியாது,” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்