இந்தியாவின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான ‘சிபிஎஸ்இ’, பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர்கள் இணையவழியாகத் திருத்துவதற்காக ‘ஆன்மார்க்’ (OnMark) எனும் புதிய இணையவாசலை இவ்வாண்டு அறிமுகப்படுத்தியது.
இந்த இணையவாசலில் ஐந்து முக்கியப் பாதுகாப்பு விதிமீறல்கள் இருப்பதாகவும் இதன்மூலம் விடைத்தாள் மதிப்பெண்களை மாற்றியமைக்க முடியுமெனவும் இணையப் பாதுகாப்பு ஆய்வாளரான நிசர்கா அதிகாரி கூறினார்.
மேலும், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி இந்தியாவின் கணினி அவசரகாலப் பாதுகாப்புப் பிரிவிடம் ஆதாரங்களுடன் அதனை அவர் தெரிவித்தார்.
‘சிபிஎஸ்இ’ தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியான நிலையில், மாணவர்களின் விடைத்தாள்களுக்கும் இணையவழியாகப் பகிரப்பட்ட விடைத்தாள்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகச் சமூக ஊடகங்களில் பலர் கண்டனக் குரல்களை எழுப்பினர்.
இவ்விவகாரத்தில் நீதிமன்ற மேற்பார்வையிலான தீவிர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மே 29ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதற்கிடையே, அடையாளம் காணப்பட்ட இணையவெளிப் பாதுகாப்புக் குறைபாடுகள் அனைத்தும் தற்போது முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுவான, பாதுகாப்பான புதிய சோதனைத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ‘சிபிஎஸ்இ’ வாரியம் அதிகாரபூர்வ அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

