கௌஹாத்தி: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்த முயன்ற பத்து பேரைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் நவம்பர் 11ஆம் தேதியன்று நிகழ்ந்தது. ஆயுதம் ஏந்திய அந்தப் பத்து பேருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மணிப்பூரில் உள்ள குக்கிஸ் சமூகத்துக்கு வழங்கப்படும் சிறப்புப் பொருளியல் சலுகைகள், அரசாங்க வேலை, கல்வி தொடர்பான சலுகைகள் மெய்ட்டிஸ் சமூகத்துக்கும் வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டதிலிருந்து அம்மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது.
அடுத்தடுத்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 250 பேர் மாண்டுவிட்டனர்.
ஏறத்தாழ 60,000 பேர் தங்கள் வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில், நவம்பர் 11ஆம் தேதியன்று ஆயுதம் ஏந்திய போராளிகள் தாக்குதல் நடத்தியதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்தது.
அவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநிலக் காவல்துறையினருக்கும் இடையே மிகக் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் துப்பாக்கிச் சண்டை ஏறத்தாழ 45 நிமிடங்களுக்கு நீடித்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மணிப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.