தேர்வு முறை மறுஆய்வுக் குழு அமைப்பு; மக்கள் கருத்து வரவேற்பு

தேர்வு முறை மறுஆய்வுக் குழு அமைப்பு; மக்கள் கருத்து வரவேற்பு

2 mins read
2f61b7ce-9de8-4a07-9071-7229533c33dd
இந்தியாவின் பொதுத் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்கள், தேர்வு தொடர்புடைய தரப்பினரிடம் இந்திய அரசு கருத்துகளைக் கேட்டு வருகிறது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் நிலவும் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்வு முறையில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதையொட்டி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டச் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, தேர்வு அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர ஆறு உறுப்பினர்கள் கொண்ட பணிக்குழு அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது உருவாக்கப்பட்டுள்ள அந்த உயர்மட்டக் குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத், முன்னாள் உளவுத்துறை இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி உள்ளிட்ட முக்கிய வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நீட், ஜேஇஇ, நெட் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வித் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அண்மைய சர்ச்சை காரணமாக முகமையின் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். ஐபிஎஸ் அதிகாரி ரவிக்குமார் சிங், ஐஏஎஸ் அதிகாரி பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்வு முறையை மேம்படுத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு நிலேகனி தலைமையிலான பணிக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு புதிய குழு அமைக்கும்போதும் பழைய முடிவுகள் கைவிடப்படக்கூடாது என்றும், நிலேகனி செயற்குழு முன்னர் அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை விளக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பொதுத் தேர்வுகளின் பாதுகாப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு, கணினிவழித் தேர்வுகள், முறைகேடுகளைத் தடுத்தல், மாணவர் நலன், அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பளித்தல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து நிலேகனி குழு ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.

ஆர்வமுள்ள மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள், ஆங்கிலம் அல்லது இந்தியில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதிக்குள் https://examreforms-taskforce.dopt.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் கருத்துகளைப் பதிவிடலாம்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாதேர்வுசெயற்குழுசீரமைப்புமத்திய அரசு