மகாராஜ்கஞ்ச்: உத்தரப் பிரதேச மாநிலப் பள்ளி மாணவர்கள் இருவர் பெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவக்கூடிய காலணிகளை உருவாக்கியுள்ளனர்.
அம்ரித் திவாரி, கோமல் ஜைஸ்வால் இருவரும் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் சிஸ்வா பஸாரில் உள்ள ‘ஆர்பிஐசி’ பள்ளியில் பயில்கின்றனர்.
இவர்கள் உருவாக்கிய தற்காப்புக் காலணி நெருக்கடி நேரத்தில் தகவலளிக்க உதவும். இதில், கால்விரல்களுக்கு அடியில் அமையுமாறு பொத்தான் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பொத்தானை அழுத்தினால் உதவி கோரித் தகவல் அனுப்பப்படும்.
குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் என யாரைக் குறிப்பிடுகிறோமோ அவர்களது கைத்தொலைபேசிக்குத் தகவல் அனுப்பப்படும்.
காலணியை அணிந்திருப்பவர் அப்போது உள்ள இடத்தையும் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள உதவும் வகையில் ஒலிக்கோப்பும் அனுப்பப்படும்.
கூடிய விரைவில் காணொளிக் காட்சியை அனுப்பும் வசதியை இதில் சேர்ப்பதன் தொடர்பில் முயல்வதாக மாணவர்கள் இருவரும் கூறினர்.
இந்தக் காலணியின் மற்றொரு சிறப்பம்சம், இதைப் பயன்படுத்தி, சிறிய அளவிலான மின்சாரத்தைப் பாய்ச்சி தாக்குதல்காரரை நிலைகுலைய வைக்கமுடியும். அணிந்திருப்பவரை இது பாதிக்காது.
இந்தக் காலணியின் விலை ரூ.2,500. இந்திய அரசாங்கத்தின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கவனத்தை இந்தப் புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

