சென்னை: தமிழக அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்குத் தற்காப்புக் கலை கற்பிக்கப்பட உள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு, வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு அந்தக் கலை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
கராத்தே, ஜூடோ, சிலம்பம் போன்ற தற்காப்புப் பயிற்சிகளை அந்த மாணவிகள் மேற்கொள்வர்.
அந்தப் பயிற்சி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் தற்காப்புக் கலைகள் சொல்லித்தரப்படும்.
“பயிற்சிகள் அளிப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று மாதங்களுக்குத் தலா ரூ.12,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“ஒரு பள்ளியில் அதிகபட்சம் 100 மாணவிகளுக்கு மிகாமலும், 10 மாணவிகளுக்குக் குறையாமலும் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, தியானம் ஆகியன பயிற்சிகளில் இடம் பெறுவது அவசியம்.
“மொத்தம் 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அவற்றை மாதத்துக்கு எட்டாகப் பிரித்து நடத்த வேண்டும்.
“தற்காப்புக் கலை பயிற்றுநருக்கான மாத ஊதியம் ரூ.4,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்றுநர் மீது குற்றமின்மை அறிக்கை காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்,” என்று அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

