இந்தியா, திட்டமிட்டபடி இவ்வாண்டு (2026) வர்த்தகப் பகுதிமின்கடத்திச் சில்லுகளைத் தயாரிக்கத் தொடங்கிவிடும் என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தியப் பகுதிமின்கடத்தித் திட்டத்தின்கீழ் அந்தக் கால அட்டவணை வகுக்கப்பட்டிருந்தது.
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஐந்தாண்டில் வர்த்தக ரீதியாகச் சில்லுகளைத் தயாரிக்க அரசாங்கம் எண்ணியிருந்ததாகத் திரு வைஷ்ணவ் குறிப்பிட்டார். ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு நான்கு ஆலைகள் செயல்படத் தொடங்கும். முன்னோடித் தயாரிப்புப் பணிகள் ஏற்கெனவே 2025ல் மூன்று ஆலைகளில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன,” என்று அவர் சொன்னார்.
இந்தியாவின் பகுதிமின்கடத்தித் துறை, அதிவேகமாய் உருவெடுத்துவருவதாகத் திரு வைஷ்ணவ் கூறினார். உலக அளவில் சில்லுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை நிறுவிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திறனாளர்களை உருவாக்கும் முயற்சிகளும் சீராக நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். பத்தாண்டில் 85,000 திறன்பெற்ற நிபுணத்துவத் தொழிலர்களை உருவாக்குவது இலக்கு. நான்காண்டிலேயே இந்தியா 65,000 பேருக்குப் பயிற்சி அளித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை உலகம் உற்றுநோக்குவதாக அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். பகுதிமின்கடத்தித் துறையில் இந்தியாவுக்கு வலுவான ஆதரவு இருப்பதையும் அவர் சுட்டினார்.
அந்தத் துறையில் செய்யப்பட்ட முதலீடு 90 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டிருப்பதாகத் திரு வைஷ்ணவ் குறிப்பிட்டார். இன்னும் அதிக முதலீடுகளுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளதால் அது 150 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நெதர்லாந்தின் வெல்தோவென் நகருக்கு மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தின்போது அமைச்சர் வைஷ்ணவ் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

