தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

2 mins read
3c8b21c4-665c-4d6b-9f8f-b7bfceca33d0
தேடல் பணிகள் இடம்பெற்று வருவதால் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது - படம்: பிடிஐ
multi-img1 of 2

ராய்பூர்: இந்தியாவின் சத்தீஸ்கர் - ஒடி‌சா மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 14 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த சலபதி என்றழைக்கப்படும் ஜெயராம் ரெட்டி என்ற மூத்த தலைவரும் அடங்குவார்.

கரியாபந்த் மாவட்டம், மெய்ன்பூர் எனும் வட்டாரத்தில் குலரிகாட் காட்டுப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திங்கட்கிழமை (ஜனவரி 20) இரவு துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.

“மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான முறியடிப்பு நடவடிக்கை திங்கட்கிழமை தொடங்கியது. மாலை பிற்பகுதிக்குள் இரண்டு பெண் மாவோயிஸ்ட்டுகளின் உடல்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். மறுநாள் காலை மேலும் சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தேடல் பணிகள் இடம்பெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரியாபந்தில் மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த தலைவர்கள் இத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பது இதுவே முதன்முறை,” என்று கரியாபந்த் காவல்துறைக் கண்காணிப்பாளர் நிகில் ராக்செச்சா விவரித்தார்.

சிறப்பு ராணுவப் படைகள் இணைந்து இந்த முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்களில் ஒருவர் காயமுற்றார் என்றும் உடனடி சிகிச்சை வழங்க அவர் ராய்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் திரு நிகில் கூறினார். அந்த வீரரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் பாதுகாப்புப் படையினரால் சத்தீஸ்கரில் 219 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

நக்சல் கோட்பாட்டிற்குப் பேரடி: அமித் ஷா

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டது நக்சல் கோட்பாட்டிற்கு விழுந்த பலமான அடி என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

நக்சல் கொள்கைகள் இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும் என்ற மனவுறுதியினாலும் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளாலும் நக்சல் கோட்பாடு இப்போது ‘தள்ளாடிக்கொண்டிருக்கிறது’ என்று திரு அமித்‌ஷா தமது எக்ஸ் பக்கம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்