தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை

2 mins read
c9521a78-c418-459e-b447-5e6f690c371e
சுட்டுக் கொல்லப்பட்ட பாபா சித்திக். - படம்: rediff.com / இணையம்

மும்பை: மகாராஷ்டிர மாநில முன்னாள் துணை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக் அக்டோபர் 12ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் லாரன்ஸ் பி‌ஷ்னோய் குண்டர் கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது. லாரன்ஸ் பி‌ஷ்னோய், திகார் சிறையில் தனக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.

மும்பையின் பாந்த்ரா வட்டாரத்தில் திரு பாபா சித்திக் மகனின் அலுவலகத்துக்கு அருகே உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் அவரை மூவர் சுட்டுக் கொன்றனர். திரு பாபா சித்திக்கின் மகன் ஸீ‌‌ஷான், சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

திரு சித்திக், தனது வாகனத்துக்குள் ஏறும்போது கால்நடையாக அவ்வழியே வந்த மூவர் அவரைப் பலமுறை சுட்டனர். நெஞ்சில் சுடப்பட்ட அவர் மாண்டுவிட்டார் என்று தங்களிடம் கொண்டு வரப்பட்டவுடன் உறுதிப்படுத்தியதாக லீலாவதி மருத்துவமனை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்தது.

சம்பவத்தில் திரு சித்திக்கைத் தவிர வேறு யாரும் காயமடையவில்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மூவரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது சந்தேக நபரைத் தேடும் பணி தொடர்கிறது.

கைதான இருவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கர்னாய்ல் சிங், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் க‌ஷ்யப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாங்கள் லாரன்ஸ் பி‌ஷ்னோய் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையின்போது அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பி‌ஷ்னோய் கும்பல் கொலைக்குப் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இச்செயலில் பி‌ஷ்னோய் கும்பல் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் அல்லது இதற்கும் குப்பத்து மறுவாழ்வுப் பிரச்சினை ஒன்றுக்கும் தொடர்பிருக்கக்கூடும் என்ற இரு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்துகிறது என்று என்டிடிவி ஊடகச் செய்தி கூறியது.

குறிப்புச் சொற்கள்