தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்த மாணவர்களின் பகடிவதை கொடுமை: மயங்கி விழுந்து மருத்துவ மாணவர் உயிரிழப்பு

2 mins read
ce642fdd-1f4f-4cdf-b4f3-7607afc11d84
18 வயதான அணில் மெதானியா என்ற மாணவர் திடீரென மயங்கி விழுந்தார். - படம்: இந்திய ஊடகம்

பதான்: குஜராத் மாநிலத்தின் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூத்த மாணவர்களின் பகடிவதை கொடுமையால் 18 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள தர்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களை மூத்த மாணவர்கள் பகடிவதை செய்து வந்துள்ளனர்.

நவம்பர் 16ஆம் தேதி இரவு இரண்டாமாண்டு மாணவர்கள் 15 பேர் இணைந்து 11 பேரை மூன்று மணி நேரம் அறைக்குள் நிற்க வைத்து பாட்டுப் பாட வைத்தும் ஆட வைத்தும் அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியும் உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், அறையை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுத்துள்ளனர். அப்போது 18 வயதான அணில் மெதானியா என்ற மாணவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை சக மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், மாணவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவனின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரியின் துறைத் தலைவர் அனில் பாதிஜா மற்றும் உயிரிழந்த மாணவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் 15 மாணவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியின் பகடிவதை தடுப்புக் குழுத் தலைவரான ஹர்திக் ஷா, இந்தச் சம்பவம் தொடர்பாக 26 மாணவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களை மறு உத்தரவு வரும் வரை கல்லூரி மற்றும் விடுதியிலிருந்து நீக்கி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்