சுரங்க விபத்தில் ‘உயிரிழந்தவர்’ உயிருடன் வந்தார்

சுரங்க விபத்தில் ‘உயிரிழந்தவர்’ உயிருடன் வந்தார்

1 mins read
a08d0d56-e487-4229-96a5-75ee49a0e684
இறந்ததாகக் கூறப்பட்ட ஊழியர் ஷியாம்பாபு சிங்ஹா உயிருடன் திரும்பி வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. - படம்: இந்து தமிழ் திசை

மேகாலயா: மேகாலயா நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட ஊழியர் ஒருவர், உயிருடன் வீடு திரும்பியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேகாலயத்தின் கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தின் தாங்ஸுகு பகுதியில் செயல்பட்டுவந்த சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி வெடிவிபத்து நிகழ்ந்தது. அதில், சுரங்கம் இடிந்ததில் ஏராளமான ஊழியர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், சிறப்பு மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் பெரிய அளவில் மீட்புப் பணியை மேற்கொண்டு, இடிபாடுகளிலிருந்து 31 பேரின் உடல்கள் மீட்டனர். உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதில், உயிரிழந்ததாகக் கூறப்பட்ட அசாமைச் சேர்ந்த 44 வயது ஷியாம்பாபு சிங்ஹா தனது வீட்டிற்கு வியாழக்கிழமை வந்தார்.

சுரங்க விபத்தில் அவர் இறந்துவிட்டதாகக் கருதி, குடும்பத்தினரால் ஓர் உடல் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுத் தகனமும் செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் அவர் உயிருடன் திரும்பியுள்ளதால், அது குறித்து மேகாலயக் காவல்துறையும் அசாம் காவல்துறையும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோரின் முகங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்திருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்