சென்னை: 2026ஆம் ஆண்டு தேர்தலில் தனித்தே போட்டி என்றும் 234 தொகுதிகளில் தலா 117 இடங்களில் ஆண், பெண் வேட்பாளர்கள் நிறுத்தபடுவார்கள் என்றும் சீமான் தெரிவித்தார்.
கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 பேரெழுச்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் பேசுகையில், “2026 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். தேர்தல்களில் தோற்றுப்போனாலும் கூட்டணிக்கு சமரசம் இல்லை. 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி, வேட்பாளர்களை நிறுத்தும். பெண்களுக்கு சம பங்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
“ஆந்திர மாநில முதல் அமைச்சர் ராஜசேகர் ரெட்டி மறைவுக்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை அளித்தது கருணாநிதி அரசு. ஆனால், மே 18 அன்று பிரபாகரன் இறந்த நாள், தமிழினம் அழிந்த நாள். அன்று தமிழினம் துக்க நாளென அறிவித்து விடுமுறை விட முடியாதா? திமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட முடியாதா? நாம் எல்லாம் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஆவோம்.
“வாழ்க, ஒழிக என்ற கோஷம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. தலைவன் வாழ்க என்று கூறுபவர்கள் நாம் அல்ல; தமிழ்த்தாய் வாழ்க என்று கூறுபவர்கள்தான் நாம்.
“உலகத்தின் பல்வேறு நிலப்பரப்புகளை வென்றவர்கள் நம் முன்னோர்கள். நாம் எந்த மக்களையும் அடிமைப்படுத்தி வாழவில்லை,” என்றார்.
இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் பங்கேற்று இருந்தனா். மேலும், மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பலகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சன் பியாபாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
2026ஆம் ஆண்டில் புதிய அரசியல் வரலாற்றைப் படைப்போம். உழவு இல்லையெனில் உணவு இல்லை. உணவை மீட்போம், உலகைக் காப்போம் என்ற முழக்கத்துடன் தேர்தலில் களமிறங்குகிறோம். என் எண்ணம் மட்டும் சின்னம் இல்லை, சின்னமே நான்தான். புயல் அடித்தாலும் அசையாத நெல்மணிகளே என் வாக்காளர்கள்.
தொடர்புடைய செய்திகள்
வருகின்ற 2026 ஆம் தேர்தலில் 234 தொகுதிகளில் தலா 117 இடங்களில் ஆண், பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இன்றி வெற்றிபெற முடியுமா எனவும் கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை என்று கூறியுள்ளார் சீமான்.
அ.தி.மு.க. கூட்டணியில் இணையுமாறு சீமானுக்குத் தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் சீமான் தனித்துப் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு யாருடனும் கூட்டணி இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

