காத்மாண்டு: நேப்பாளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் ஏழு பேர் மாண்டுபோயினர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த 55 வயதான முத்துக்குமார், தனது மனைவியுடனும் நண்பருடனும் நேப்பாளத்துக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.
மூவரும் சென்னையில் இருந்து ரயில் மூலம் அலகாபாத் சென்று, பின்னர் அங்கிருந்து நேப்பாளத்துக்குச் சென்றுள்ளனர்.
நேப்பாளத்தில் உள்ள புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் தலமான மனகாமனா திருத்தலத்திற்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும்போது, இவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
காந்தர் என்ற மலைப்பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, 400 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனத்தில் மொத்தம் 14 பேர் இருந்தனர். இவர்களில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
இறந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களில் முத்துக்குமார் உள்ளிட்ட மூவரும் அடங்குவர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம் நேப்பாளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

