டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர், டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
“நெரிசல் ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தவுடன் எங்களது மூன்று குழுவினரைச் சம்பவ இடத்திற்கு அனுப்பினோம். அவர்கள் பக்தர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,” என்று மாநிலப் பேரிடர் மீட்புப் படை அதிகாரி அர்பன் யதுவன்சி கூறினார்.
“மானசா தேவி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதையில் காலை 9 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, எட்டு பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய முப்பது பேர் காயமடைந்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் உயர் மருத்துவ மையங்களுக்குச் சிகிச்சை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்,” என்று ஹரித்வார் மாவட்ட நீதிபதி மயூர் தீட்சித் கூறினார்.
“பாதையில் மின் கம்பி இருப்பதாக யாரோ ஒரு சிலர் கூச்சலிட்டனர். அதைத் தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் பீதியும் குழப்பமும் ஏற்பட்டது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது,” என்று சம்பவத்தை நேரில் பார்த்த மயூர் தீட்சித் மேலும் தெரிவித்தார்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த துயரச் செய்தியால் மிகவும் வருத்தமடைந்தேன்.
“எஸ்டிஆர்எஃப், உள்ளூர் காவல்துறையினர், இதர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பிலிருந்து வருவதுடன் நிலைமையையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைத்து பக்தர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
“காலை 9 முதல் 9.15 மணி வரை பக்தர்கள் உதவி கேட்டு அழும் சத்தம் கேட்டது. அது நடந்து மட்டுமே செல்லக்கூடிய பாதை என்பதால், உடனடியாகக் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. ஆம்புலன்சுகள் உடனடியாக விரைந்து வந்தன. காயமடைந்தவர்களை மீட்பதற்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் நாங்கள் காவல்துறைக்கு உதவினோம்.
“பாதைக்கு அருகில் இருந்த எல்லைச் சுவரும் கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது,” என உஜ்வால் பண்டிட் என்ற அர்ச்சகர் ஊடகங்களுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு யாத்ரிகர் கூறியபோது, “நான் பார்த்தவரை ஏறக்குறைய 20 பேர் காயமடைந்ததாகத் தெரிகிறது. சம்பவத்திற்குப் பிறகு, கோயில் வாயில்கள் மூடப்பட்டன. மேலும், அனைத்து யாத்ரிகர்களும் திரும்பி வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்,” என்றார்.
நடந்த நிகழ்வுகளை நேரில் பார்த்த ஒருவர் விவரித்தபோது மனம் உடைந்து பேசினார். “நாங்கள் தரிசனத்திற்காகச் சென்றிருந்தோம். உள்ளே ஒரு பெரிய கூட்டம் இருந்ததால் கோயிலின் பிரதான வாயில் மூடப்பட்டிருந்தது. வேறொரு திசையில் இருந்து மக்கள் ஓடி வந்தனர். அவர்கள் என்னையும் என் குழந்தைகளையும் தள்ளிவிட்டு ஓடினர்,” என்றார். காயமடைந்த மற்றொரு பக்தர் பீகாரைச் சேர்ந்தவர். “கோயிலில் திடீரென ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. மக்கள் கூட்டத்திலிருந்து வெளியேற முயன்றபோது, கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது,” என அவர் நினைவு கூர்ந்தார்.

