புதுடெல்லி: இந்தியாவின் புதிய குடிநுழைவு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு போலிக் கடப்பிதழ், போலி விசாவுடன் அந்நாட்டுக்குள் நுழைவோர், அங்கு தங்குவோர் அல்லது அங்கிருந்து புறப்படுவோருக்கு ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் ஒரு மில்லியன் ரூபாய் (15,324 வெள்ளி) வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம் என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) பிடிஐ ஊடகச் செய்தி தெரிவித்தது.
இந்திய உள்துறை அமைச்சு வரைந்துள்ள அந்தச் சட்டத்தின்படி, ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள் போன்றவை வெளிநாட்டவரைப் பற்றிய தகவல்களை அரசாங்கத்திடம் தெரியப்படுத்துவது கட்டாயமாகும். விசா செல்லுபடியாகும் காலகட்டத்துக்குப் பிறகும் இந்தியாவில் தங்கும் வெளிநாட்டவரைக் கண்காணிக்கும் நோக்குடன் இந்த விதிமுறை வரையப்பட்டுள்ளது.
அதோடு, எல்லா அனைத்துலக விமானங்களும் கப்பல்களும் தாங்கள் ஏற்றிச் செல்லும் பயணிகள், தங்களின் ஊழியர்கள் ஆகியோரின் விவரங்களை அரசாங்கத்திடம் தெரியப்படுத்தவேண்டும்.
“இந்தியாவுக்குள் நுழையவும் தொடர்ந்து தங்கவும் இந்தியாவிலிருந்து புறப்படவும் போலி அல்லது ஏமாற்றிப் பெறப்பட்ட கடப்பிதழ், விசா, பயண ஆவணங்களைத் தெரிந்தே பயன்படுத்துவோர், விநியோகிப்போருக்குக் குறைந்தபட்சம் ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். தண்டனைக் காலம் ஏழாண்டுகளுக்கும் நீட்டிக்கப்படலாம். குறைந்தது ஒரு லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சம் 10 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்,” என்று இம்மாதம் 11ஆம் தேதி நாடாளுமன்றக் கீழவையில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் மாதம் 31 வரையிலான காலத்தில் 9,840,000 வெளிநாட்டவர் இந்தியா சென்றனர் என்று இக்கனாமிக் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.
புதிய மசோதா, வெளிநாட்டவர் அடிக்கடி செல்லும் இடங்களுக்கென விதிமுறைகளை வரைய மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட இடங்களை மூடுவது, அவற்றைப் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கலாம்.
குடிநுழைவு, வெளிநாட்டவர் ஆகிய இரு அம்சங்களின் தொடர்பிலான அனைத்து விவரங்களையும் கவனிக்க வகைசெய்வது குடிநுழைவு, வெளிநாட்டவர் மசோதா 2025ன் (Immigration and Foreigners Bill, 2025) இலக்காகும்.

