விமான நிலையத்தில் பங்ளாதேஷ் பிரதமரின் ஆலோசகரிடம் பல மணிநேர விசாரணை

விமான நிலையத்தில் பங்ளாதேஷ் பிரதமரின் ஆலோசகரிடம் பல மணிநேர விசாரணை

படம்: ராய்ட்டர்ஸ்

16 Jun 2026 - 3:54 pm

2 mins read

புதுடெல்லி: பங்ளாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகளால் பல மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு, தீவிரமாக விசாரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிக்கு நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியது பங்ளாதேஷ் அரசு.

இந்தியா, பங்ளாதேஷ் இடையேயான உறவில் அண்மைக் காலமாக விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பங்ளாதேஷ் பிரதமரின் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான் இரு தினங்களுக்கு முன்பு புதுடெல்லி சென்றிருந்தார்.

ஒரு மாநாட்டில் பங்கேற்க அவர் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், டெல்லி வந்திறங்கிய அவரை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இது சற்றும் எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவரது இக்கருத்தை அடுத்து, திங்கட்கிழமை (ஜூன் 15) டாக்காவில் உள்ள இந்தியத் துணைத் தூதர் பவன் பாதேவை நேரில் அழைத்து தனது கவலையை பங்ளாதேஷ் அரசு முறைப்படி தெரிவித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடுகடத்த வேண்டும் என பங்ளாதேஷ் பலமுறை கோரிக்கை விடுத்தபோதும் அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து, இருதரப்பு உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், பங்ளாதேஷில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள அந்நாட்டு குடிமக்களை நாடுகடத்தும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

இந்த நடவடிக்கையின்போது புதிய விதிமுறைகளை இந்திய அரசு பின்பற்றவில்லை என்று பங்ளாதேஷ் குற்றஞ்சாட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்