புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு திங்கட்கிழமையன்று (டிசம்பர் 9) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
40க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மின்னஞ்சல்வழி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர். இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டன.
மதர் மேரீஸ் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் அரசாங்கப் பள்ளி, டெல்லி அரசாங்கப் பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 7.06 மணி முதல் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதனால் மாணவர்கள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
“பள்ளிக் கட்டடங்களுக்குள் நான் வெடிகுண்டுகளை வைத்திருக்கிறேன். சிறிய வெடிகுண்டுகளான அவற்றை மிக நன்றாக ஒளித்து வைத்திருக்கிறேன். அவற்றால் கட்டடங்களுக்கு அதிக சேதம் இருக்காது. ஆனால், குண்டு வெடிக்கும்போது பலர் காயமடைவர். எனக்கு 30,000 டாலர் (40,299 வெள்ளி) வழங்காவிட்டால் நான் குண்டுகளை வெடிக்கச் செய்வேன்,” என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்தது.
சில பள்ளிகளில் கூட இதுவரை சந்தேகத்துக்குரிய எதுவும் காணப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடரும் மிரட்டல்கள்
கடந்த வாரம் டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அந்த மிரட்டல் போலியானது என தெரியவந்தது.
அதற்கு முன்னர் டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்த பகுதியில் குறைந்த சக்தி கொண்ட மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள அனைத்து சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதுபோல் ஒவ்வொரு முறையும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும்போது அது குறித்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக வந்து குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் ஆழ்ந்த அச்சத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.