மலப்புரம்: குரங்கு அம்மை எனப்படும் ‘எம் - பாக்ஸ்’ தொற்றுநோய் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் அந்த தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது.
குரங்கு அம்மை நாட்டிற்குள் பரவக்கூடாது என்பதற்காக இந்தியவிமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. மேலும், அணைத்துலக பயணிகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி கிருமி, இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபருக்கு 38 வயது. இந்த நோய்த்தொற்று சம்பவத்தையும் சேர்த்து இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை தொற்று சம்பவம் பதிவாகியுள்ளது.
“1-பி கிருமி மிகவும் தீவிரமான ஒன்று. இந்தியாவில் இந்நோய் பெரிய அளவில் பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க மாநிலங்கள் முழுமையாக தயாராக உள்ளன. மக்கள் பீதியடைய தேவையில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த 26 வயது ஆடவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.