சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஊட்டி, கொடைக்கானல் போல இயல்புக்கு மாறாக கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடும் குளிருக்கான காரணங்கள் பற்றி வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மன்னார் வளைகுடா அருகே நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி முக்கியக் காரணமாக உள்ளது.
மேலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் ஈர்ப்பு விசையால், வட மாநிலங்களில் வீசும் கடும் குளிர் காற்று வட தமிழகத்தை நோக்கி இழுக்கப்படுகிறது. ரஷ்யா வழியாக வீசும் சைபீரியக் குளிர் அலையின் தாக்கமும் தமிழகத்தில் உணரப்படுகிறது.
கடந்த 4 நாட்களாகச் சூரிய ஒளி இல்லாததால் குளிர்ச்சி அதிகரித்துள்ளது. இவ்வாறு பல்வேறு வானிலை காரணிகள் ஒன்றிணைந்ததே இந்தத் திடீர் குளிருக்குக் காரணம் எனத் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பி. அமுதா தெரிவித்துள்ளார்.

