டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில், விமான சேவைகள் முடக்கம் - பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2 mins read
e73a7bb2-df5e-46e6-ac7c-3faae27d900a
டெல்லியில் கடும் பனிமூட்டத்தால் ரயில், விமானச் சேவைகள் முடங்கியது. - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.

கடந்த சில நாள்களாகத் தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாகச் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத நிலை உள்ளது. சாலைப் போக்குவரத்தைப் போலவே, ரயில், விமான சேவைகளிலும் பெரும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு வரும், அங்கிருந்து புறப்படும் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த ககன் என்ற பயணி கூறுகையில், “நான் கான்பூர் செல்ல வேண்டும். ஆனால், கடும் பனி காரணமாக ரயில் 8 மணி நேரம் தாமதமாகச் செல்கிறது,” என்று வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று (டிசம்பர் 29) காலை டெல்லி, ஹிண்டன் விமான நிலையங்களில் கடும் பனி காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நேரங்களில் மாற்றம் ஏற்படலாம்.

“வானிலை சீரடைந்தவுடன் செயல்பாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும். பயணிகள் விமான நிலையத்திற்கு வரும் முன்பு விழிப்புடன் இருக்குமாறும் எங்கள் இணையத்தளத்தில் விமானங்களின் தற்போதைய நிலவரத்தைச் சரிபார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.

அதைப்போல், டெல்லி விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடர்ந்த பனிமூட்டத்தின் காரணமாக விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள் தாமதம், ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

“விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ எங்கள் ஊழியர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்,” என்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்