வட இந்தியாவில் கடும் பனி மூட்டம்; ரயில், விமானச் சேவை பாதிக்கும் என எச்சரிக்கை

1 mins read
00b49643-4780-4942-848d-8f2822b6ad06
கடும் பனிமூட்டம் காரணமாகச் சேவையில் தாமதத்தை எதிர்கொள்ளும் புதுடெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம். - படம்: ஒன்இந்தியா

புதுடெல்லி: வட இந்தியாவில் இரு நாள்களுக்குக் கடுமையானப் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விமானம், ரயில் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாகச் சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்குக் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலைப் போக்குவரத்து மட்டுமல்லாது, விமானச் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21), புதுடெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் மட்டும் கிட்டத்தட்ட 110 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 370க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.

இந்நிலையில், மேலும் இரு நாள்களுக்கு விமானம், ரயில் சேவை பாதிக்க வாய்ப்புள்ளது என்றும் அதற்குப் பிறகு மூடுபனியின் தீவிரம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, திங்கட்கிழமையன்று (டிசம்பர் 22) விமானங்கள், ரயில்களின் சேவை சற்று மேம்பட்டிருந்தாலும் திடீர் வானிலை மாற்றங்கள் காரணமாகச் சேவைகள் சற்று தாமதங்களைச் சந்திக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு, விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு, தங்களது விமான நிலைய இணையத்தளத்தில் அறிந்துகொள்ள வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்