புதுடெல்லி: டெல்லியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் உள்ளது.
இதனால் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) விமானப் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது.
காலை நேரத்தில் பார்வை அளவு 800 மீட்டருக்கு குறைவாகவே இருந்தது. பனியில் புகை இருந்ததால் அது நிலைமையை மேலும் கடுமையாக்கியது.
இதனால் 107 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதலே டெல்லியின் பல்வேறு இடங்களிலும் புகைப்பனி படர்ந்து காணப்பட்டது. காலை 8 மணிக்கு டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 428 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி ரயில் நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை, மயூர் விகார், பத்பர்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்பனி படர்ந்து காணப்பட்டது.
ஆனந்த் விகார், பஞ்சாபி பாக், ஆர்.கே. புரம், லோதி சாலை, ஷாதிப்பூர், வாஜிப்பூர், ஜகாங்கீர்புரி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு கடுமையான அளவில் இருந்தது.
குறைவான தொலைவையே பார்க்க முடிந்தது. இதனால் ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோன்று, மகாராஷ்டிராவின் மும்பை நகரிலும் காற்றுத் தரக் குறியீடு 179 என்ற அளவில் இருந்தது.
இது மிதமான அளவு என்றாலும், நுரையீரல், இதயப் பாதிப்பு உள்ள மக்கள் சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்ள்வதாகக் கூறப்படுகிறது. மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் புகைப்பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால், சில பகுதிகளில் 500 மீட்டருக்கு குறைவான தொலைவையே பார்க்கக் கூடிய சூழலும் உள்ளது.