தாமதமாக வந்தால் கடும் தண்டனை; சொகுசு ஹோட்டலை ‘நரகம்’ என்கின்ற ஊழியர்கள்

1 mins read
2606a30b-87ea-4811-8575-db4464549294
ஊழியர்களைத் துன்புறுத்தும் வகையில் சொகுசு ஹோட்டல் நடத்துவதாகக் கூறப்படுகிறது. - படம்: பிக்சாபே

பெங்களூரு: தாமதமாக வருவோரை ‘நரக வேதனைக்கு’ ஆளாக்குவதாக பெங்களூரில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு மணி நேரமாகக் கைகளை உயர்த்தியபடி நிற்பது, அனைத்து குளிர்பதனப் பெட்டிகளையும் வெறுங்கையாகச் சுத்தம் செய்வது எனத் தண்டனைகள் கடுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஹோட்டலில் சமையல் வல்லுநராகச் சேர்ந்த 32 வயது பெண்ணிடம் திட்ட இயக்குநர், “நரகத்திற்கு வருக,” என்று கூறி வரவேற்றதாகச் சொன்னார்.

அவருக்கு மட்டுமன்றி அவ்விடத்தில் வேலை செய்த அனைவருக்கும் ‘நரகமானது’ அந்த வேலையிடம்.

மிக நீண்ட வேலைநேரம், பகைமையுடன் நடத்தப்படும் வேலைச்சூழல், தொடர்ச்சியான பாலியல் தொல்லை போன்ற பிரச்சினைகளை ஊழியர்கள் எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது.

‘த நோட்’ சஞ்சிகையிடம் நயன்தாரா மேனன் பக்லா, சொகுசு ஹோட்டலில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்துப் பேசினார்.

“காதல் கைகூடாவிட்டாலும் சரி, குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டாலும் சரி, சொந்தப் பிரச்சினைகளுக்கு நேரம் தரமாட்டார்கள். நாங்கள் முக ஒப்பனையைப் போட்டுக்கொண்டு சிரித்தபடி வருவோரை வரவேற்க வேண்டும், அவ்வளவுதான்,” என்றார்.

மேலும், 18 முதல் 20 மணி நேரத்திற்கு வேலை பார்த்தல், புதிதாக வேலையில் சேர்வோரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அனுபவசாலிகள், தொடர்ச்சியாக பாலியல் ரீதியான வஞ்சகப் பேச்சு போன்றவற்றை அவர் உதாரணமாகக் கூறினார்.

வேலையிடத்தில் ‘உயிரை மாய்த்துக்கொள்ளுதல்’, ‘பலரும் சேர்ந்து ஒருவரைப் பகடிவதை செய்தல்’ போன்றவையும் நடந்ததாக அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

“மனநலம் என்ற பேச்சுக்கே இடமில்லை,” என்றார் பக்லா.

குறிப்புச் சொற்கள்