குடிநீருடன் கலந்த கழிவுநீர்; எழுவர் மரணம், பலர் அவதி

2 mins read
0ee958a7-f544-4e92-bb6d-85708e89a70d
149க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 36 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 116க்கும் மேற்பட்டோருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. - படம்: ஏஎன்ஐ

இந்தூர்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததை அடுத்து, அதைக் குடித்தோரில் ஏழு பேர் மாண்டுவிட்டனர். மாசடைந்த நீரைப் பருகியதில் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

149க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 36 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

116க்கும் மேற்பட்டோருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்தியப் பிரதேச அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

மாசடைந்த நீரைக் குடித்ததால் மூவர் மாண்டதாகச் சுகாதாரத் துறை அறிவித்தபோதிலும் ஏழு பேர் மாண்டதாக மேயர் புஷ்யாமித்ரா பார்கவ் தெரிவித்துள்ளார்.

கட்டாய பாதுகாப்புத் தொட்டி கட்டப்படாமல் காவல்துறைச் சோதனைச்சாவடிக்கு அருகில் உள்ள பிரதான குடிநீர் குழாய்க்கு மேல் கழிவறை கட்டப்பட்டதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக இந்தூர் நகராட்சி கார்ப்பரேஷன் ஆணையர் திலிப் குமார் கூறினார்.

பாதிப்பு மோசமடையாமல் இருக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிப்புக்குக் காரணமாக இருந்தோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத்துக்குப் பொறுப்பு வகித்த உதவி பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்புப் பணிகளைச் சரியாகச் செய்யாததற்காக மண்டல அதிகாரியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டடுள்ளார்.

இதற்கிடையே, பாதிப்புக்குள்ளான பகுதி மக்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். தண்ணீர் குடிக்கவும் அஞ்சுகின்றனர். அடிப்படைத் தேவை உயிரைப் பறிக்கும் எமனாகிவிட்டதாக அழுது புலம்புகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகள் வீடு வீடாகச் செல்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்களுக்கு மருந்து விநியோகம் செய்யப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்