புதுடெல்லி: வெளிநாட்டு நிதி மோசடி, பாலியல் மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
உஜ்வால் கிஷோர், அவரது மனைவி நீலு ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளளது.
சைப்ரஸ் நாட்டில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத்தம்பதியர் இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர்.
நொய்டாவில் உள்ள இத்தம்பதியரின் வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ரூ.15.66 கோடி சட்டவிரோத வெளிநாட்டு நிதி தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுடனான பணப்பரிமாற்றம் தொடர்பில், வங்கிகளுக்கு தவறான தகவல்களை, காரணங்களை அளித்திருப்பதும் தெரியவந்தது.
விளம்பர, சந்தை ஆய்வுக்காக பணம் அனுப்பியதாகக் கூறி இத்தம்பதியர் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், டெல்லி, நொய்டா பகுதிகளைச் சேர்ந்த பல இளம் பெண்களுக்கு மாதந்தோறும் இரண்டு லட்ச ரூபாய் ஊதியம் தருவதாகக் கூறி ஆசைகாட்டி, பாலியல் காணொளிகளில் இடம்பெறச் செய்தனர் என்றும் இதற்காக தங்கள் வீட்டில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்டுடியோ’ அமைத்திருந்தனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
வாடிக்கையாளர்கள் ஆபாசக் காணொளிக்காக இணையம் வழி செலுத்தும் தொகையில் 25 விழுக்காடு மட்டுமே அதில் இடம்பெற்ற பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நூற்றுக்கணக்கான பெண்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த அதிகாரிகள், நெதர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து இந்த மோசடித் தம்பதியர் ரூ.7 கோடி தொகையை இந்தியாவில் இருந்தபடி, பற்று (debit) அட்டையைப் பயன்படுத்தி ரொக்கமாக எடுத்ததும் தெரியவந்ததாகக் கூறினர்.
முக்கிய குற்றவாளியான உஜ்வால் கிஷோர், இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து தனது மனைவியுடன் இந்த நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பு ரஷ்யாவில் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.