மலப்புரம்: சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வளர்ப்புத் தந்தைக்கும் அதற்கு உடந்தையாக இருந்த அச்சிறுமியின் தாய்க்கும் இந்தியாவின் கேரள மாநிலம், மஞ்சேரி விரைவு நீதிமன்றம் 180 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
அத்துடன், அவ்விணையர் ரூ.1,175,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த அளவிற்கு எந்தவொரு தாயும் தன் பிள்ளைக்குக் கொடுமை இழைத்திருக்க முடியாது என்று மஞ்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எம். அஷ்ரஃப் தமது தீர்ப்பின்போது குறிப்பிட்டார்.
கடந்த 2019 முதல் 2021 வரை அச்சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அச்சிறுமியின் தாயார் 2019ல் தன் முதல் கணவரைப் பிரிந்து, பாலக்காடு மாவட்டம், செர்புலச்சேரியைச் சேர்ந்த ஓர் இளையருடன் ஓட்டம் பிடித்தார். பாலக்காடு முதல் மலப்புரம் வரை அவர்கள் பலமுறை இடம் மாறி வசித்தனர்.
அந்தக் காலகட்டத்தில், அப்பெண்ணின் முதல் கணவருக்குப் பிறந்த பெண் பிள்ளையை அந்த ஆடவர் பலமுறை வன்கொடுமைக்கு ஆளாக்கினார். அத்துடன், தாயும் வளர்ப்புத் தந்தையும் நெருக்கமாக இருந்ததையும் கைப்பேசியில் ஆபாசக் காணொளிகளையும் பார்க்குமாறு அச்சிறுமி வற்புறுத்தப்பட்டார்.
அச்சிறுமியின் தந்தைவழித் தாத்தா அவளைப் பார்க்க முயன்றபோது, அவளின் தாயும் அவரின் காதலனும் அவரைத் தடுத்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.
அக்கம்பக்கத்தில் வசித்தோர் தலையிட்டு, அச்சிறுமி அடிக்கடி அடித்து உதைக்கப்படுவதாகவும் அவருக்கு உணவு மறுக்கப்படுவதாகவும் கூறினர். அதனைத் தொடர்ந்து, அச்சிறுமியின் தாத்தா காவல்துறையில் புகாரளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதன் அடிப்படையில், மலப்புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அச்சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்தார். அதனையடுத்து, அச்சிறுமியின் தாயும் வளர்ப்புத் தந்தையும் கைதுசெய்யப்பட்டனர். குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட அவ்விருவரும் தவனூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

