சிறுமி பாலியல் கொடுமை: சமயப்பள்ளி ஆசிரியர்க்கு 187 ஆண்டுச் சிறை

2 mins read
af2135c3-b5eb-4b51-b9dd-17c674c02adc
குற்றவாளி முகம்மது ரஃபி. - படம்: கேரள ஊடகம்

கண்ணூர்: கொவிட்-19 பெருந்தொற்று முடக்கநிலையின்போது கிட்டத்தட்ட ஈராண்டுகளாக சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மதரசா ஆசிரியர்க்கு 187 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவின் கேரள மாநிலம், தளிப்பரம்பா விரைவு நீதிமன்ற நீதிபதி பி.ராஜேஷ் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) இத்தீர்ப்பை வழங்கினார்.

உதயகிரி எனும் ஊரைச் சேர்ந்த முகம்மது ரஃபி, 41, என்ற அந்த ஆடவர் இதற்குமுன்னும் குற்றம் புரிந்தவர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் அவர் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டவர்.

இந்நிலையில், ரஃபிமீது சுமத்தப்பட்ட ஏழு பாலியல் குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிபதி ராஜேஷ் தெரிவித்தார்.

கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்தே அப்போது 14 வயதான அந்த மாணவியை ரஃபி சீரழிக்கத் தொடங்கியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.

“அச்சிறுமி ஏழாம் வகுப்பு படித்தபோது தொடங்கிய அக்கொடுமை 2021 டிசம்பர் மாதம்வரை தொடர்ந்தது,” என்று வழக்கறிஞர் ஷெரிமோல் ஜோஸ் கூறினார். அதுகுறித்துப் பிறரிடம் கூறினால் அச்சிறுமியைச் சபித்துவிடுவதாகவும் ரஃபி மிரட்டினார்.

அம்மாணவியின் மதிப்பெண் குறையத் தொடங்கியதாலும் அவரது மனநலத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டும் அவரைக் கண்ணூரில் உள்ள ஓர் ஆலோசனை மையத்திற்கு அவருடைய பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்குதான் தமக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளை அச்சிறுமி பகிர்ந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட, ரஃபி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஏழு குற்றச்சாட்டுகளையும் சேர்த்து அவருக்கு 187 ஆண்டு சிறைவிதிக்கப்பட்டுள்ளபோதும், ஒரே காலத்தில் அத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதால், ரஃபி 50 ஆண்டுகாலம் சிறையில் இருக்க வேண்டும் என்றும் ஷெரிமோல் ஜோஸ் குறிப்பிட்டார். அத்துடன், ரஃபிக்கு ரூ.9 லட்சத்து 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

முன்னதாக, வாலப்பட்டணம் காவல் நிலையக் கட்டுப்பாட்டிற்குள் வரும் இன்னொரு மதரசாவிலும் மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர்மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதற்கான தண்டனையின்போது பரோலில் வெளியான நிலையில்தான், இப்போதைய வழக்கு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்