பாலியல் வழக்கு: முன்னாள் எம்எல்ஏவின் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு

2 mins read
36f574fb-3098-48f8-9f92-eee02fea46fe
தாம் சீரழித்த பெண்ணின் தந்தையைக் கொன்றதற்காக உத்தரப் பிரதேச மாநில முன்னாள் பாஜக எல்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்குப் பத்தாண்டுச் சிறை விதிக்கப்பட்டது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: முன்னாள் பாஜக எல்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு விதிக்கப்பட்ட பத்தாண்டுச் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்தியாவையே உலுக்கிய உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையைக் கொன்றதற்காகச் செங்கருக்குப் பத்தாண்டுச் சிறை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் அவருக்குப் பிணை வழங்க முடியாது என்றும் திங்கட்கிழமை (ஜனவரி) உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

தண்டனைக்கு எதிரான செங்கரின் மேல்முறையீட்டு வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படுவது அவரது கைகளில்தான் உள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

தமக்கான பத்தாண்டுத் தண்டனைக் காலத்தில் கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகளைச் செங்கர் சிறையில் கழித்துவிட்டார். இந்நிலையில், தண்டனையை எதிர்த்து அவர் பல மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதும் அவரது மேல்முறையீடு தொடர்பிலான விசாரணையில் தாமதத்தை ஏற்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

செங்கரும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களும் குற்றவாளிகள் என 2018ஆம் ஆண்டு டிஸ் ஹஸாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் செங்கர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

கடந்த 2017 ஜூன் 4ஆம் தேதி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 18 வயது நிரம்பாத அப்பெண்ணைச் செங்கர் தமது வீட்டிற்குக் கடத்திச் சென்று, அவரைச் சீரழித்துவிட்டார்.

அதுதொடர்பான வழக்கு விசாரணைக்காக கடந்த 2018 ஏப்ரல் 3ஆம் தேதி உன்னாவ் நீதிமன்றத்திற்குச் சென்றபோது அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆனால், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கூறி, அதற்கு மறுநாள் காவல்துறை அவரைக் கைதுசெய்தது. காவல்துறையின் பிடியில் இருந்த அவர், பல்வேறு காயங்களால் ஏப்ரல் 9ஆம் தேதி உயிரிழந்தார்.

முன்னதாக, செங்கர் ஏற்கெனவே கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டதாகக் கூறி, 2025 டிசம்பர் 23ஆம் தேதி அவரது தண்டனையை நிறுத்திவைப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும் மற்ற ஆர்வலர்களும் போராட்டமும் மேல்முறையீடும் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, செங்கரை விடுவிக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என டிசம்பர் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்