புவனேஸ்வர்: ஒடிசாவில் இளவயது மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் படித்துவந்த 20 வயது மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை கல்லூரி முதல்வரின் அறைக்கு வெளியே தீக்குளித்தார்.
90 விழுக்காடு தீக்காயங்களுடன் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீக்காய நிபுணர் குழு சிகிச்சை அளித்து வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி மாணவி திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.
கல்லூரியில் பி.எட். இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவியிடம் பேராசிரியரும் பாடத் துறைத் தலைவருமான சமீர் குமார் சாஹு என்பவர் 15 நாள்களுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வரிடம் அந்த மாணவி புகாரளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து, மாணவியைத் தேர்வில் தோல்வியடைய வைத்துவிடுவேன் என்று அந்தப் பேராசிரியர் மிரட்டியுள்ளார்.
மிரட்டலுக்கு அடிபணியாத அந்த மாணவி, மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்து பேராசிரியர் சாஹுவை பாதுகாத்ததாகக் கூறி கல்லூரி முதல்வர் திலீப் கோஷை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவி உயிரிழந்ததும் பேராசிரியர் சாஹுவையும் அவர்கள் கைது செய்தனர்.
பலியான மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மாணவி தீக்குளித்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. மாணவி சிகிச்சை பெற்று வந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்பு இரவில் திரண்ட காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ஒடிசாவை ஆளும் பாஜகவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) ஒன்றுகூடிய, காங்கிரஸ் உள்ளிட்ட எட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரும் வியாழக்கிழமை (ஜூலை 17) ஒடிசாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.