தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஷாங்காய் மாநாடு: கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

1 mins read
cca28418-27ee-45bf-9bf4-f7f0e5f85818
சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகவே கொண்டிருப்பதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் மாநாடு ஜூன் 25ஆம் தேதி தொடங்கியது.

மாநாட்டின் முதல்நாள் முடிவில் வெளியிடப்படவிருந்த கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்துவிட்டது.

பயங்கரவாதம், வட்டாரப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அந்த அறிக்கை அமைந்துள்ளதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இம்மாநாட்டின் ஒரு பகுதியாக உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே இந்தியா மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை என ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

“இந்தியா மீது தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஏவப்படுகிறது. குழுவின் மற்ற உறுப்பு நாடுகள் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களைக் கண்டிக்க வேண்டும்.

“அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே நாங்கள் நடத்திய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’. இது எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடரக்கூடாது என்ற இலக்கோடு நடத்தப்பட்டது,” என்றார் ராஜ்நாத் சிங்.

சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகவே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய நாடுகள்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருப்பதாகக் கூறினார்.

“பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடம் கொடுக்கக் கூடாது. எஸ்சிஓ குழு அத்தகைய நிலைப்பாடு கொண்ட நாடுகளைத் தயக்கமின்றிக் கண்டிக்க வேண்டும்,” என்றார் திரு ராஜ்நாத் சிங்.

குறிப்புச் சொற்கள்